இந்திய விவசாயம் வளர்ச்சியடையாதது ஏன் ?

இந்திய விவசாயம் வளர்ச்சியடையாதது ஏன் ?

விவசாயிகள் தற்கொலைகள் சமீப காலங்களில் பெரும் சர்சைகளை உருவாக்கியுள்ளது. அதற்க்கான காராணிகள் மற்றும் தீர்வுகளை பார்ப்போம்.

சுதந்திரத்திற்க்கு முன்பு வரை இந்திய விவசாயத்தின் தன்மை வேறு, இன்று உள்ள நிலை வேறு. அன்று அரசின் தலையீடு மற்றும் கட்டுபாடுகள் இன்று போல் இல்லை. அரசு உதவிகளும் அதிகம் இல்லை. எனவே விவசாயம் இதர தொழில்களை போலவே வளர்ந்தது. அன்று ஜமீந்தார்கள், பெரு விவசாயிகள், குத்தகை விவசாயிகள் அதிகம் இருந்தனர். நில வரியும் மிக அதிகமாக இருந்தது. நில வரியையும், அதை வசூல் செய்ய ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஜமீந்தார்கள் முறையையும் ஒழித்து விட்டோம். அது மிக சரியான செயல்தான். ஆனால் சோசியலிச கொள்கைகளின் அடிப்படையில் சுதந்திர இந்தியாவில், நில உச்சவரம்பு சட்டங்களை உருவாக்கி, பெரும் நிலசுவாந்தர்களின் ‘உபரி’ நிலங்களை அரசு கையகப்படுத்தி, நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு  பகர்ந்தளிக்கும் லட்சியவாதம் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கி இன்று விவாசயத்தில் பெரும் சிக்கல்களை உருவாக்கியதை பற்றி பார்ப்போம்.

எந்த ஒரு தொழில் அல்லது உற்பத்தி நிறுவனமும், முதலாளித்துவ உற்பத்தி முறையில் நவினமடைய, அதன் உற்பத்தி திறனையும், நிறுவனத்தின் அளவையும் அதிகரிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. எக்கனாமிக்ஸ் ஆஃப் ஸ்கேல் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நிறுவனத்தின் அளவு மிக பெரிதாகும் போதுதான் உற்பத்தி செலவு குறையும், உற்பத்தி திறனையும்
மிக அதிகரிக்க முடியும். உதாரணமாக நூற்பாலைகள், இரும்பு ஆலைகள் போன்றவற்றில்
கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றாங்களை சொல்லலாம். விவசாயமும் இதர தொழில்களை போல் உற்பத்தி சார்ந்ததுதான். எனவே ஒரு தனிபட்ட விவசாய பண்ணை வெற்றிகரமாக, குறைந்த செலவில் மிக அதிகம் விளைச்சலை உருவாக்க, குறைந்தபட்ச நிலம் தேவை. உலகெங்கிலும், முக்கியமாக வளர்ந்த நாடுகளில் விவசாய பண்ணைகளின் சராசரி அளவு 500 ஏக்கர்களுக்கு மேல் உள்ளது. ஒரு லச்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும் பண்ணைகளும் உள்ளன. இவை முதலாளித்துவ நாடுகளில் மட்டுமல்ல், முன்னால் கம்யூனிச நாடுகளான சோவியத் ரஸ்ஸியா போன்ற நாடுகளிலும் அன்று கூட்டு பண்ணைகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் கொண்டவையாக திகழ்ந்தன. எனவே அவற்றின் உற்பத்தி திறன் மிக அதிகரித்து, நவின வேளான்மை சாத்தியமானது.

தொழில் புரட்சி 18ஆம் நூற்றாண்டில் உருவாகும் வரை உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும்பாண்மையான மக்கள் விவசாய தொழில் தான் ஈடுப்பட்டனர். தொழில் துறை வளர வளர படிப்படியாக விவசாயத்தை விட்டு உற்பத்தி துறைக்கும், பின்பு சேவை துறைக்கும் மாறினர். இது முதலாளித்துவ முறையில் வளர்ந்த நாடுகளாக உருமாறிய மேற்க்கு அய்ரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல, கம்யுனிச பாணியில் வளரந்த சோவியத் ரஸ்ஸிய, யுகோஸ்லேவியா, போலந் போன்ற கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலும் நிகழ்ந்தது. இன்று அந்நாடுகளிலும், வட அமெரிக்காவிலும், மற்றும் பல இதர வளர்ந்து நாடுகளிலும், மக்கட் தொகையில் 5 சதவீதற்க்கும் குறைவானர்வர்களே விவசாய தொழிலில் உள்ளனர். ஏனையோர் உற்பத்தி மற்றும் சேவை துறைக்கு படிப்படியாக நூற்றாண்டுகளில் மாறியுள்ளனர்.

இயல்பாக நிகழ வேண்டிய இந்த அடிப்படை மாற்றம் இந்தியாவில் நிகழாமல் நம் சோசியலிச கொள்கைகள் தடுத்துவிட்டன. சுதந்திர இந்தியா சோசியலிச கொள்கைகள் என்ற கருத்தாக்கத்தில், தொழில் துறையை முடக்கியது. விவசாயத்தையும் நவினமயமாகாமல் தடுத்தது. பெரும் விவசாயிகள் அழித்தது. பணையார்கள் என்பவர்களே கொடுங்கோலர்கள், வில்லனகள் என்று பொதுபுத்தியில் அன்றைய இடதுசாரிகளால் ஏற்றபட்டது. திரைபடங்கள் மற்றும் நவீன இலக்கியங்களில் இந்த பிரச்சாரம் மிக அதிகம் செய்யப்பட்டது. சாதியம், தீண்டாமை மற்றும் பண்ணையடிமை முறைகள் அன்று பலமாக இருந்தது தான். ஆனால் நிலப்பிரவுத்தவத்தில் இருந்த இந்த தீமைகளை மேற்கு அய்ரோப்பிய நாடுகள் லிபரல் ஜனனாயகம் சார்ந்த சந்தை பொருளாதார கொள்கைகள் மூலம் நூற்றாண்டுகளில் களைந்த முறையை நாம் கையாள தவறி, விவசாயிகளையே அழித்து விட்டோம். இன்று 15 அல்லது 18 ஏக்கர்களுக்கு மேல் நன்செய் நிலங்களை யாரும் வைத்திருக்க முடியாது. சராசரி பண்ணையின் அளவு ஒரு ஏக்கருக்கு குறைவே. நிலம் துண்டுதுண்டுகளாக சிதறியதால், வேளான்மை நவீன உற்பத்தி முறைக்கு மாற முடியாமல், பழைய பாணியில், மனித உழைப்பு மிக அதிகம் தேவைபடும் முறையிலேயே தேங்கியுள்ளது. தொழில்துறையை சேர்ந்த முதலீட்டார்கள், பெரிய அளவில் முதலீடு செய்து, பெரும் விவசாய பண்ணைகளை வாங்கி உருவாக்க இன்றும் சட்டபடி முடியாது. எனவே புதிய முதலீடுகள், தொழில்னுட்பங்கள், கருவிகள் தொழில் துறையில் உருவாகும்  பாணியில் இங்கு விவசாயத்தில் உருவாக சாத்தியமில்லாமல் போனது. பல லச்சம் கோடி ரூபாய்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆண்டுதோறும் விவசாய துறைக்காக செலவிட்டும் சிக்கல்களை தீர்க்கமுடியவில்லை. உர மான்யங்கள், குறைந்த வட்டிக்கு கடன்கள், நீர் பாசன வசதிகள், இலவச மின்சாரம், சந்தை விலையை விட அதிக விலைக்கு கொள்முதல் மற்றும் பல இதர வழிகளில் பலவாராக செலவு செய்தும் வளர்ந்த நாடுகளை போல் அல்லது சீனா அளவிற்க்கு கூட இங்கு விவசாயத்தை மேம்படுத்த முடியவில்லை.

நாட்டின் ஜிடிபியில் விவசாயத்தின் பங்கு சுமார் 18 சதவீதம் தான். ஆனால் மக்கட்தொகையில் விவசாயிகளின் சதவீதம் 52 சதவீதம். நிகர உற்பத்தியில் 18 சதவீதம் உடைய விவசாயத்தில் அதே அளவில் 18 சதவீதம் மக்கள் மட்டும் ஈடுப்பட்டால் தான், சரியாக இருக்கும். ஆனால் இந்த 18 சத வருமானத்தில் நாட்டின் மக்கட்தொகையில் பாதிபேர்கள் வாழ்வது, பெரும் சாபக்கேடு. விவசாயம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கு இதுதான் மூலக்கரணம்.
டீ, காபி மற்றும் ரப்பர் ஏஸ்டேடுகளுக்கு மட்டும் நில உச்சவரம்பு சட்டங்களிலில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலே குறிபிட்ட ’எக்கனாமிக்ஸ் ஆஃப் ஸ்கேல்’ எனப்படும் காரணம் தான் இந்த விதிவிலக்கிற்க்கு அடிப்படை. இந்த எஸ்டேட்டுகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் கொண்டவை. உலகெங்கிலும் இதே பாணிதான். ஏணைய இந்திய பண்ணைகளை போல் ஒரு ஏக்கருக்கும் குறைவான அளவில், துண்டு துண்டுகளாக சிதறியிருந்தால், டீ, காபி மற்றும் ரப்பர் உற்பத்தி செலவு மிக மிக மிக அதிகரித்து, கட்டுபடியாகமல் இந்த பண்ணைகளே இன்று அழிந்திருக்கும். நெல், கோதுமை போன்ற உணவு பயிர்களுக்கும், இதர வகைகளுக்கு இதே லாஜிக் பொருந்தும் என்பதை இந்திய இடதுசாரிகள் இன்றுவரை உணரவில்லை. எனவே இன்றும் பெரும் பண்ணைகள் உருவாக தடை உள்ளது. 

சிறு விவசாயிகள் இதனால் தங்கள் சின்னஞ்சிறு பண்ணைகளை விட்டு மாற்று தொழில்களுக்கு மாற முடியாமல் சிக்கியுள்ளனர். சட்டப்படி அவர்களில் நிலங்களை பெரிய அளவில் யாரும் வாங்க தடை இருப்பதால், அவர்களின் நிலங்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை.  நீர் பற்றாகுறை அலல்து வேறு காரணங்களினால் விவசாயம் பொய்க்கும் காலங்களில் பெரும் துன்பத்தில் அழிகின்றனர். சிறு விவசாயிகளுக்கு வங்கி மற்றும் அமைப்புசார் நிதி நிறுவனங்கள் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் கிடைப்பது அரிது. எனவே அவர்கள் கந்துவட்டிகார்களிடம் மிக அதிக வட்டிக்கு கடன் வாங்கி, கடன் பொறிகளில் சிக்கி, மீளவே முடியாத சூழல்களில் சிக்கியுள்ளனர். 

நில உச்ச வரம்பு சட்டங்களை உருவாக்கமால், சோசியலிச பாணி என்ற பெயரில் உற்பத்தி துறையிம் முடக்காமல் அன்று சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை நேர்மையான முறையில் கடைபிடித்திருந்தால், இந்திய விவசாயம் மற்றும் பொருளாதாரம் இன்று வளர்ந்த நாடுகள் போல் மாறியிருக்கும். வாய்ப்பை தவறவிட்டு, அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ளாமல், தவறான காரணங்களை இன்றும் கற்பிக்கிறோம்.

மராத்வாடா மற்றும் ஆந்திர பகுதிகளில் தான் விவசாயிகள் தற்கொலைகள் மிக அதிகம் நிகழ்கின்றன. பருத்தி விவசாயிகள் மட்டும் தான் இப்படி செய்துகொள்கின்றனர். இத்தற்கொலைகளுக்கு தாரளமயமாக்கல் தான் காரணம் என்ற மூட நம்பிக்கை இன்றும் உள்ளது. தாரளமயமாக்கல் கொள்கை அகில இந்தியாவிற்க்கும் தான். மேலும் விவசாயத்துறையில் இன்னும் தாரளமயமாக்கல் (அதாவது நவீன கார்ப்பரேட் பெரும் பண்ணைகள்) அனுமதிக்கபடவில்லை. பருத்தி விவசாயிகள் தவிர இதர விவசாயிகளில் தற்கொலை இந்த அளவு இல்லை. பருத்தி விவசாயிகளிலும், பஞ்சாப், தமிழகம் போன்ற பகுதிகளில் தற்கொலைகள் இல்லை. எனவே மராத்வாடா,ஆந்திர பருத்தி விவசாயிகளின் தற்கொலைகளுக்கு லோக்கல் காரணிகள் தான் இருக்க 
முடியம்.

விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்றால், இடைதரகர்கள் குறைவாக, நேரடி கொள்முதல் முறைகளை சாத்தியமாக்க வேண்டும். சில்லரை வணிகத்தில் பெரு நிறுவனங்கள் சமீப காலங்களில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலைமை மாற மேலும் பல பத்தாண்டுகள் ஆகும். விளைபொருட்களை பதப்படுத்தி, மதிப்பு கூட்டும் தொழில் நிறுவனங்கள் அதிகம் உருவாக வேண்டும். நில உச்ச வரம்பு சட்டங்களையும் படிப்படியாக களைந்து, பெரும் பண்ணைகள் நவீன முறையில் இயங்க சாத்தியமாக்க வேண்டும். இந்திய வேளானமை வளர்ந்த நாடுகள் இருப்பது போல் நவீனமயகமானல் தான் விடிவு காலம் பிறக்கும். 
விவசாயத்திற்க்கு அடுத்த முக்கிய துறையான உடை உற்பத்தியில் இம்மாற்றம் கடந்த 25 ஆண்டுகளில் ஓரளவு சாத்தியமானதால் தான் இன்று ஆடை பஞ்சம் இல்லை. ஆடைகளின் உற்பத்தி செலவு மிக மிக குறைந்து, ஏழைகளும் இன்று போதுமான ஆடைகளை மிக குறைந்த விலையில் வாங்க முடிகிறது. 30 ஆண்டுகளுக்கு முன் இத்துறையில் இருந்த நிலை வேறு. தாரளமயமாக்கலுக்கு பின் ஜவுளி துறையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை போல் விவசாயத்திலும் ஏற்பட்டால் தான் விவசாயிகள் பிரச்சனைகள் தீர்ந்து, விவசாய விளை பொருட்களின் விலைகளையும் வெகுவாக குறைக்க முடியும். முதலில் இப்பிரச்சனைகளின் அடிப்படைகளை பற்றிய புரிதல்கள் தேவை. இவை பற்றி விவாதங்கள் மூலம் தீர்வுகளை அடைய முடியும்.