புனரபி ஜனனம், புனரபி மரணம்

புனரபி ஜனனம், புனரபி மரணம்

மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு. இந்த பஜகோவிந்த வரிகள் மனித வாழ்வை மட்டும் சொல்லவில்லை. மிக ஆழமான அர்த்தங்கொண்டது. பார்டிக்கள் இயற்பியல், காஸ்மாலஜி என்ப்படும் பிரஞ்சத்தின் தோற்றம், போன்றவை இதில் அடங்கும்.

ஐன்ஸ்டினின் பிரபல சம்ன்பாடு ( E = MC2) அணுவை பிளந்து
சக்தியாக மாற்றி அணுசக்தியயை மனிதன் உபயோகிக்க வழி
வகுத்தது. அணுகருவுக்குள் இருக்கும் துகள்கள் சக்தியாகவும்,
சக்தி மீண்டும் துகள்களாகவும் சதா மாறிக்கொண்டே
இருக்கின்றன. இதுவே சிவசக்தி. சிவம் சக்தியாகவும், சக்தி சிவமாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது. சிவதாண்டவத்தின் பின்னனி இதுவே. ஒவ்வொறு பரோட்டானும் இந்த படைக்கும்-அழிக்கும் நடனம் செய்கிறது.

உலகமே, ஏன் பிரபஞ்சமே இந்த எதிர்-மறைகளால் ஆனதுதான்.

பிறப்பு x இறப்பு
துகள் x சக்தி
யின் x யாங் (Taoism)
இரவு x பகல்
ஆண் x பெண்
இன்பம் x துன்பம்
கம்யுனிசம் x கேப்பிடலிஸ்ம்
ஆத்திகம் x நாத்திகம்
இரக்கம் x குரூரம்
அன்பு x வெறுப்பு
வெற்றி x தோல்வி
வெப்பம் x குளிர்
1 x 0 (binary system)

குவாண்டம் மெக்கனிக்ஸ் விஞ்ஞானி நியல்ஸ்போர் சொன்னபடி 'இந்த மாதிரி தனிப்பட்ட துகள்கள் என்பதெல்லாம் ஒருவித கற்பனைதான். அவைகளை நாம் அறிந்து கொள்வதெல்லாம் மறைமுகமாகத்தான்.'
டேவிட் போம் என்னும் மற்றொரு விஞ்ஞானி 'பிரபஞ்சம் முழுவதும் விரவியிருக்கும் ஒரு விதமான ஒருமைப்பட்ட உறவு நிலைதான் உண்மை' என்கிறார்.

அரவிந்தர் : 'நம் எதிரே காணும் பொருள் தனிப்பட்ட ஒன்றல்ல. பிரபஞ்சத்தின், ஒரு பெரிய உண்மையின், நாம் உணரும், காணும் அத்தனையும் சேர்ந்த ஒரு மகா உண்மையின் வெளிபாடு'

ஒப்பன்கைமர் : 'உலகம் என்பது பற்பல சம்பவங்களின் ஒன்று சேர்ந்த ஒரு முழுமையின் வடிவம்தான்.'

இந்த உண்மையைதான் பிரம்மம் என்கிறோம்.

'வானும் மண்ணும் காற்று வெளியும் எல்லா உயிர் மூச்சுக்களும் கலந்த ஒருவன்' என்று முனடகோபனிஷத் சொல்வதும் இதைத்தான்.

----------------------------------

நன்றி :

1.'Tao of Physics' by Frijof Capra
2.'ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து' , சுஜாதா.

வறுமைக்கு காரணமும், விளைவுகளும்

செல்வசெழிபிற்க்கு அருகமையில், கடுமையான வறுமையய் காணும் பெரும்பாலான, மனிதநேயங்கொண்டவர்கள் இந்த முரண்பாட்டிற்க்கு காரணம் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளே என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர்.

இரண்டாம் உலக்ப்போரில் முற்றிலும் அழிந்த ஜெர்மனியில், 1945ல் வறுமை, பசி, வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருந்தது. சந்தை பொருளாராத கொள்கைகளை, கடும் எதிர்பிற்கிடையில் அமல் படுதிய பின் பத்தே ஆண்டுகளில் ஜெர்மனி மீண்டும் தலை நிமிர்ந்தது. "ஜெர்மன் மிராக்கில்" என்று இன்றும் போற்றப்படுகிறது.

1947இல், நம்மைவிட மிகவும் கீழ் நிலையில் இருந்த மலேசயா, சிங்கப்பூர், தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை பின்பற்றி இன்று நம் நாட்டை விட பல மடங்கு சுபிட்சமாக உள்ளன. சைனாவும் முதலாளித்துவ பாதைக்கு வந்து, வேகமாக வளம் பெற்று வருகிறது.

1950 முதல் இடதுசாரி, சோசியலிச கொள்கைகளை பின்பற்றியதின் விளைவாக, நாம் 1991ல் திவால் நிலையில் இருந்தோம். அரசு, தங்கத்தை அடமானம் வைத்து இறக்குமதிக்கான் டாலர்களை பெற வேண்டிய நிலை உருவானது. அதன் பிறகு, சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை அமல் படுத்தியதன் விளைவாக, இன்று மீண்டு வருகிறோம். பல கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் எழும்ப முடிந்தது. தொழில் துறையின் வளர்சியால் புதிய வேலை வாய்ப்புகளும், அரசுக்கு பெரிய அளவில் வரி வசுலும் உருவாகிறது. அதை வைத்து அரசு, பல நலத்திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. மத்திய அரசின் நிகர வரி வருமானம், 1995ல் 1,10,354 லச்சம் கோடியில் இருந்து 2007ல், 5.48,122 லச்சம் கோடியாக ஆக உயர்ந்தது. 1991இல், இரண்டு வார இறக்குமதிக்கான அந்நிய செலவாணி கையிருப்பே இருந்தது. இன்று சுமார் 100 மடங்கு அதிகரித்து, 8,64,000 கோடி ரூபாய் மதிப்பிற்க்கு டாலர் கையிருப்பு சேர்ந்துள்ளது. அந்நிய செலவாணிக்காக் I.M.F / World Bank இடம் கை ஏந்த வேண்டிய நிலை இன்று இல்லை.

ராணுவதிற்க்காக வருடம் சுமார் 93,000 கோடி ரூபாய் செலவிடுவது நமக்கு மிக அதிகமான சுமை. இது போன்ற பல சுமைகளை விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியாக நாம் அனைவரும், குறிப்பாக ஏழைகளும் சுமக்க வேண்டியுள்ளது.

இன்னும் வெகு தூரம் போக வேண்டியதுள்ளது. எழ்மை ஒழிப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிபடை வசதிகாளுக்காக அரசு பல லச்சம் கோடி ரூபாய்கள் செலவிட்டாலும், அதில் பெரும்பாண்மையான தொகை அரசு எந்திரத்தாலும், அரசியல்வாதிகளாளும் திருடப் படுகிரது. அரசு மான்ய தொகை, பணக்கார விவசாயிகளுக்கே பெரும்பாலும் சேர்கிரது. உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்கும்படி செய்ய, ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை சீர் படுத்த வேண்டும். அதுவே நமக்கு முதல் வேலையாகும். அதை செய்யாமல், வறுமைக்கு காரணமாக முதலாளித்துவ பொருளாராதார் கொள்கைகளை காரணமாக காட்டுதல் தவறு.

விலைவாசி ஏன் உயர்கிறது ?

நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.

சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.

மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.

வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.

1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.

ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். ஏழைகள், தங்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புகின்றனர். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது. சம்பளம் போதாமல் அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க முற்படுகின்றனர்.

ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.

அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.

லார்டு கீய்யினஸ் சொன்னது : "..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?

கருப்பு பணத்தின் லீலைகள்

வருமான வரி, விற்பனை வரி மற்றும் இதர வரிகளின் சுமை மிக அதிகம். அதனால் மிகப் பெரும்பான்மையோர் வரி ஏய்ப்பு செய்கின்றனர். வரி வலையிருந்து தப்பும் பணம் கருப்பு பணமாகிறது. வரி ஏய்ப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் லஞ்சமாகப் பெறும் பணமும் இக்கருப்பு பொருளாதாரதில் சேர்கிறது.

கருப்பு பணத்தை பாதுகாக்க குறுக்கு வழிகள் உள்ளன. பிணாமி நபர்களிடம் கொடுத்தல், ரியல் எஸ்டெட், பஸ் ரூட், மற்றும் பல இடங்களில் பதுக்குவார்கள்.

காஞ்சி மடம் சீரழிந்தது கருப்பு பண நன்கொடைகளால்தான். அவ்வகையில் வரும் பணம் கணக்கில் வராததால், நிர்வாகிகளால் இஷ்டம் போல் செலவு செய்ய முடிந்தது. விளைவுகளை நாடறியும்..

தொழில் கூட்டாளிகளை, நிர்வாகதில் இருக்கும் கூட்டாளி ஏமாற்றுதல் ; காசாளர் மற்றும் நிர்வாகிகள் கடை பணத்தை திருடுதல் போன்றவை பெருக முக்கிய காரணம், பெரும்பாலும் வியாபரம் கருப்பில் நடப்பதால்.. மொத்ததில் நேர்மை குறைந்து திருட்டுதனம் நாடு முழுவதும் பரவி விட்டது.

கல்வி நிறுவனங்கள், அரசியல், சினிமா, ரியல் எஸ்டெட், பஸ் ரூட், நகை வியாபாரம், கந்து வட்டி, விபச்சாரம் போன்றவைகளில் கருப்பு பணம் விளையாடுகிறது. யாரும் கவலை படுவதுமில்லை, பயப்படுவதுமிலை.

வரி ஏய்ப்பு செய்யும் மக்கள், கொஞ்ச் கொஞ்சமாக அனைத்து சட்டங்களையும் மீற முற்படுகின்றனர். அதனால், அனைத்து துறைகளிலும் நேர்மை வெகுவாக குறைகின்றது. அனைத்து வகை வரிகளின் விகித்தை வெகுவாக குறைத்தால் மட்டுமெ நிலமையை சீராக்க முடியும். அதற்கு அரசின் வெட்டி செலவுகளை கடுமையாக குறைக்க வேண்டும். நடக்கற காரியமா ? சொல்லுங்கள் ?

போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்

பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல் மிகுந்துள்ளது. Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால் இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல். 70களில் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன. சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக் குறை, ஊழல் மற்றும் நெரிசல். பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க முயல்கின்றனர். அவை மலிந்து விட்டன.சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம். தனியார் பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.

இடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது. BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது. அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான்.

ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு விடிவு காலம் என்றோ? அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்..

நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. வாக்களிக்கும் பொதுமக்கள் பணம் மற்றும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்குகளை விற்கின்றனர். மக்களுக்க ஏற்ற அரசாங்கமே அமையும் என்பது பொது விதி.

சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. "நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது" என்பது ஒரு பழமொழி.

பணக்காரர்கள் மீது மிகக் கடுமையான வரி விதித்து அதை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முயன்ற சோசியலிஸக் காலங்களில் உச்சக்கட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டது (1971). மனிதனின் இயல்பான குணம் சுயநலம். தனக்கு ஒரு லாபம் அல்லது ஆதாயம் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே ஒரு செயலை முழு மனதுடனும், ஊக்கத்துடனும் செய்வான். அச்செயலினால் கிடைக்கும் லாபத்தைப் பாதுகாக்க சட்டத்தை மீற முற்படுவான். அதனால் நேர்மை குறையும்.

அதுதான் இங்கு நடந்தது. வருமான மற்றும் உற்பத்தி வரிகளை ஏய்க்க முற்பட்டனர் முதலாளிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போயினர். பெர்மிட், லைசன்சு தருவதற்கு லஞ்சம் கேட்டனர் அரசியல்வாதிகள். கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கருத்தாக கேட்டனர் அமைப்பு சார்ந்த மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள். லைசன்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையான பற்றாக்குறை உண்டானது. சிமிண்டு இன்று எளிதாக கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சிமண்ட் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் கடும் பற்றாக்குறை. கருப்பு மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், இன்று கேட்க தமாஸாக இருக்கிறதா? பழையக் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன்கள் சிமிண்ட், சர்க்கரை மற்றும் பருத்தி நூல் பேல்களை பதுக்கி வைப்பர். கடத்துவார்கள்!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியார் உற்பத்தி வேண்டிய அளவு பெருக தாரளமாக அனுமதிக்கப்பட்டவுடன் இன்று அந்த மாதிரியான தமாஸ் காட்சிகள் இல்லை. உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி விடலாம். ஆனால் இழந்த குணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல காலமும் பல தலைமுறைகளும் பிடிக்கும் போல் தெரிகிறது.

சர்வ சாதாரணமாக நாம் அனைவரும் அரசாங்க விதிகளையும் சட்டங்களையும் மீறும் தன்மையைப் பெற்று விட்டோம். அளவுக்கு அதிகமான வருமான வரியை ஏமாற்ற ஆரம்பித்து இன்று அனைத்து வரிகளையும் ஏமாற்றுவதை ஒரு கலையாகக் கற்றுள்ளோம். சாலை விதிகள், மென்பொருள் மற்றும் சினிமா துறைகளின் காப்புரிமை விதிகளை மீறுகின்றோம். திருட்டு விசிடி, மென்பொருள்களையும் பயமின்றி கூச்சமின்று பயன்படுத்துகிறோம்.

வேலை செய்யாமலேயே ஊதியம், தகுதி இல்லாமலும் மான்யம், இலவசங்களுக்காக தன்மானத்தையும் நேர்மையையும் இழந்துள்ளோம். பிச்சைக்காரப் புத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஓசியில் கிடைச்சா பினாயிலைக் கூட குடிக்கத் தயாராக உள்ளோம். ஒரு LPG சிலிண்டருக்கு அரசாங்கம் நமக்கு ரூபாய் 200 மான்யமாக, இனாமாக தருவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். குறைக்க முற்பட்டால் எதிர்க்கிறோம்...

தொழிலாளர் நலச் சட்டங்களும் வேலை வாய்ப்பும்

நமது நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சுமார் 90 சதவீதம் உள்ளனர். அமைப்பு சார்ந்தவர்கள் 10% மட்டுமே. 100 பேர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு பேக்டரி ஆக்ட் சட்டம் செல்லும். குறைந்த பட்ச சம்பளம், ESI, PF மற்றும் விடுப்புகள். இதை விட முக்கியமாக ஒரு தொழிலாளியை வேலையை விட்டு நீக்க மிகக் கடினமான நடைமுறைகள் உள்ளன. சோம்பேறியானாலும், நேர்மையற்றவனானாலும், தகுதியற்றவனாய் ஆனாலும் அத்தொழிலாளியை வேலையை விட்டு அனுப்புவது மிகக் கடினம். அப்படியே சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும், தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்.

இதன் மொத்த விளைவாக, தொழிற்சாலைகள் புதியவர்களை எடுக்கத் தயங்குவார்கள். ஒப்பந்த முறைப்படி (contract labour) எடுப்படு பரவலாக உள்ளது. ரூ 3500க்கு 8 மணி நேரம் வேலை செய்ய பல்லாயிரம் பேர் தயாராக இருந்தாலும், சட்டத்திற்குப் பயந்து தொழிற்சங்கங்களுக்குப் பயந்து 10 பேர் செய்யும் வேலைக்கு பதில் தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தும் அவலம் உண்டானது.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கடுமையான துன்பங்கள் போதிய வேலை வாய்ப்பின்மை, நிரந்தர வேலை கிடைப்பதில்லை. அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின், சங்கங்களின் குறுகிய நோக்கத்தால், சுய நலத்தால் அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு மேலும் வேலை வாய்ப்பு பெருகாத நிலை உள்ளது.

நாங்கள் ஒரு சிறு தொழிற்சாலை நடத்துகிறோம். அருகாமையில் உள்ள ஒரு பெரிய தொழிற்சாலைக்கு ஜாப் வொர்க் செய்து தருகிறோம். அவர்களிடம் இருப்பது போல நவீன இயந்திரங்கள் எங்களிடம் இல்லை. இருந்தாலும் எங்கள் உற்பத்தித் திறன் (productivity) அவர்களை விட மிக அதிகம். செலவும் குறைவு. எனவே அவர்கள் மேலும் ஆள் எடுத்து உற்பத்தியைப் பெருக்காமல் எங்களைப் போன்ற ஜாப் வொர்க்கர்ஸுக்குக் கொடுக்கின்றனர். அந்தத் தொழிற்சாலையின் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் முறையாக, நேர்மையாக வேலை செய்வதில்லை. யாரையும் வேலையே விட்டு நீக்க முடியாததால் தங்கள் இஷ்டம் போல் வேலை செய்கின்றனர். மேலதிகாரிகளிடம் பயமோ, கீழ்ப்படிதலோ இல்லை. இவர்களின் பொறுப்பற்ற தன்மையினாலும் ஒழுக்கமின்மையினாலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. அல்லது அவை எங்களைப் போன்ற சிறு தொழிற்சாலைகளுக்கு ஏற்றமதி செய்யப்படுகின்றன. (எங்களிடம் சம்பளம், அவர்களை விட குறைவு. ஏனென்றால் அதுதான் கட்டுப்படியாகும்)

இடது சாரிகளும் இச்சட்டங்களை மாற்ற எதிர்க்கின்றனர். யதார்த்த உண்மைகளைப் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். அரசாங்க ஊழியர்கள் பண்பு இதை விட மோசமானது. ஒவ்வொரு நாளும் நான்கில் ஒரு பங்கு அரசாங்க ஆசிரியர்கள் (கிராமப் பள்ளிகளில்) பள்ளிக்கு வருவதில்லை. தட்டிக் கேட்க யாருமில்லை. வேலை போகும் பயமில்லை. தனியார் பள்ளிகளில் இந்நிலை இல்லை. பல்லாயிரம் கோடி ரூபாய்கள் அரசாங்கம் செலவு செய்தும் மாணவர்களுக்கு பயன் இல்லை. ஏன் இந்த நிலை? யோசியுங்கள்.