தமிழக இட ஒதுக்கீட்டு முறையில் கிரீமி லேயர் முறை ஏன் தேவை?

தமிழகத்தில் சமூகநீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட 69% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் பிற்பட்ட பிரிவினருக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீதமும், SC பிரிவினருக்கு 19 சதவீதமும், ST பிரிவினருக்கு 1 சதவீதமும் அடங்கும். இதில் BC, MBC பிரிவினருக்கு கிரீமி லேயர் (Creamy Layer - பொருளாதாரத்தில் மேம்பட்ட பிரிவு) முறை தேவையா என்பது குறித்த விவாதம் பரவலாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள சமூகச் சூழலும், திராவிட இயக்க அரசியல் கோட்பாடுகளும் இப்பிரிவை எதிர்த்து வருகின்றன.

பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள் அல்லது கிரீமி லேயர் என்பது இந்தியாவில் கல்வி மற்றும் செல்வ வளம் மிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும். தற்போதைக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானத்திற்கு மேலுள்ள பிற்படுத்தப்பட்டவர்கள், மத்திய அரசாங்கத்தின் கல்வி மற்றும் இதர தொழில்முறை சலுகைகளைப் பெறத் தகுதி பெறமாட்டார்கள்.

"பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர், பொருளாதாரச் சமூக வாய்ப்பு பெற்றவர்கள்" அல்லது பசையடுக்கு (கிரீமி லேயர்) என்ற சொல் சதானந்தன் கமிஷனால் 1971 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சட்டநாதன் கமிஷன், மேலே குறிப்பிட்ட பிரிவில் வரும் மக்களுக்கு இடஒத்துக்கீடு வழங்கக்கூடாது எனப் பரிந்துரை செய்தது.

மண்டல் கமிசன் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மத்திய அரசு, செப்டம்பர் 3, 1993இல், ஜனாதிபதி, உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசில் குறிப்பிட்ட நிலைக்கு மேல் பதவி வகிப்பவர்கள், படைப்பிரிவுகளில் கர்ணல் மற்றும் அதற்கு மேல் பதவி வகிப்பார்கள் ஆகியோரின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாது என அறிவித்தது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 8 இலட்சம் ரூபாய்க்கு மேல் குடும்பத்தின் ஆண்டு வருமானம் உடையவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களில் கிரீமி லேயரைப் பிரிவின் கீழ் வகைபடுத்தப்படுகின்றனர்.

முன்னதாக 2004 ஆம் ஆண்டு வரை ரூ.4.5 லட்சமாக இருந்த உச்சவரம்பு, 2013 ஆம் ஆண்டு ரூ.6 லட்சமாகவும், 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ.8 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. இந்த வருமானத்தில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டாது. சொத்துகளில் இருந்து வாடகை வருவாய், வட்டி வருவாய், டிவிடண்ட் வருவாய் போன்ற வருமானங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது மிக அநீதியான,  தவறான முறை. அனைத்து வகை வருமானங்களையும் சேர்த்து கணக்கிடுவதே நியாயமான முறையாக இருக்கும். தனியார் துறை ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பள வருவாய் கொண்ட மேட்டுக்குடியினர் மிக எளிதாக இதன் மூலம் இட ஒதுக்கீட்டை பெற முடியும். 

மாநில அரசுகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள இடஒதுக்கீட்டில் வெவ்வேறு வகைப்பாட்டில் கிரிமி லேயரைப் பயன்படுத்துகின்றனர்கேரளாமத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என்ற உச்ச வரம்பு நடைமுறையில் உள்ளதுதமிழகத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிலும், அரசுத் துறை வேலைவாய்ப்புகளிலும் கிரீமி லேயர் முறை பயன்படுத்துவதில்லை

அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில் அதிமுகதிமுகமதிமுகஜனதா தளம்பாமகவிடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் கிரீமி லேயர் முறையை எதிர்க்கின்றனர்சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் ஆதரிக்கின்றன. அதே நேரத்தில் அனைத்துக் கட்சிகளும் SC, ST பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறையை எதிர்க்கின்றன.

தமிழகத்தில் கிரீமி லேயர் முறை தேவையா அல்லது தேவையில்லையா என்பதை முடிவு செய்ய, சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளை கொண்டு இதை முடிவு செய்யலாம் என்று ஒரு சாரர் வாதிடுகின்றனர். ஆனால் மத்திய அரசு இதை முறையாக, முழுமையாக செய்ய தயங்குகிறது. எனவே தரவுகள் கிடைப்பது தாமதமாகி வருகிறது.

தரவுகள் மிகக் குறைவாக இருக்கும் நிலையில், நான் எனது நீண்ட வருட வாழ்க்கை அனுபவம் மற்றும் எனக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் கிரீமி லேயர் முறையை ஆதரித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். ஒவ்வொரு  சாதியிலும் சிறுபான்மையினராக இருக்கும் கிரீமி லேயர் பிரிவினர், இட ஒதுக்கீட்டில் பெரும்பான்மை இடங்களை வென்று, அதன் பலன்களை பல தலைமுறைகளாக அனுபவித்து வருகின்றனர். இது சமூக அநீதி. இட ஒதுக்கீடு உண்மையில் யாருக்கு தேவையோ, அவர்களுக்கு கிடைக்காமல் செய்கின்றனர். பெரும்பான்மையினராக உள்ள ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த BC, MBC பிரிவு மாணவர்கள், அரசு பள்ளிகளில் இலவச கல்வி கற்பவர்கள். இவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பது மிக அரிது.

உயர் கல்வியில் கிரீமி லேயர் முறை அவசியம் தேவை. ஆனால் அரசு பணிகளுக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறை கூடாது என்றும் வாதிடுகிறேன். அரசு பணியிடங்களில் இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்பட முடியாத சூழல் தொடர்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் கிடைக்காததால், BC, MBC, SC, ST பிரிவுகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல், காலியாக உள்ள சூழல் தொடர்கிறது. எனவே அரசு பணிகளில் கிரீமி லேயர் முறை தேவையில்லை.

கரூரில், கவுண்டர் சாதியைச் சேர்ந்த ஒரு நடுத்தர வர்க குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த நான், கொங்கு பகுதி எனப்படும் மேற்கு மாவட்டங்களில் பல ஊர்களில் கல்வி பயினறு, சொந்த தொழில்கள் செய்த அனுபவம் உண்டு. எனது உறவினர்கள் பலரும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். பிற்பட்டவர்கள் பிரிவைச் சேர்ந்த கவுண்டர் சாதியினரின் வாழ்வியல், பொருளாதார, சமூக, கல்வி நிலை பற்றி ஓரளவு அறிவேன்.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் BC கோட்டா மூலம் மிகப் பெரிய எண்ணிக்கையில் ஆண்டுதோறும் பயன்பெறும் கவுண்டர் சாதி மாணவர்களின் பின்புலம் பற்றி ஓரளவு அறிவேன். ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் உயர் ரக தனியார் பள்ளிகளில் பயின்ற, கிரிமி லேயர் பிரிவு மாணவர்கள் தாம் இவர்களில் பெரும்பான்மையினர் என்று உறுதியாக கூற முடியும். வன்னியர், முக்குலத்தோர், நாடார், முத்துரையர் போன்ற இதர BC, MBC பிரிவு மாணவர்களிலும், இதே போல கிரீமி லேயர் மாணவர்கள் தான் மிக அதிக அளவில் இடஒதுக்கீட்டின் பயன்களை பெறுகின்றனர் என்றும் கூறலாம்.

இதை உறுதி செய்ய எளிய வழிமுறை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள மிக முக்கிய அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் BC, MBC கோட்டா மூலம் சேர்ந்த மாணவர்களின் பொருளாதார பின்புலம் பற்றி தமிழக அரசு ஒரு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கல்லூரி வாரியாக, ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு வினாப்பட்டியலை அளித்து, அவர்களின் பதில்களை பெற்று, தொகுத்து ஒரு அறிக்கை தயாரிக்க வேண்டும். இந்த வினாப்பட்டியலில், அம்மாணவர் பிளஸ் டூ பயினற பள்ளி பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர்களின் ஆண்டு வருவாய் பற்றிய கேள்விகள் இடம் பெறும். தனியார் பள்ளி என்றால், அதன் ஆண்டு கட்டணம், விடுதிக் கட்டணம் (விடுதியில் தங்கிப் பயினறவர்களுக்கு மட்டும்), சிறப்பு வகுப்புகளுக்கு சென்றால் அதன் கட்டணம் பற்றிய கேள்விகள் இருக்கும். பெற்றோர்கள் மற்றும் மூத்த சகோதர, சகோதரிகளின் ஆண்டு வருவாய் பற்றிய கேள்வுகளும் இருக்கும். இதில் தவறான தகவல்கள் அளிக்கப்படுவதை தடுக்க, பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் வருமான வரி அட்டை எண்களை (PAN எண்) அளிக்கச் செய்ய வேண்டும். PAN எண் மூலம் தமிழக அரசு, மிக எளிதாக ஒருவரின் வருமான வரித் தாக்கல் படிவங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்று, சரி பார்க்க முடியும்.

தர வரிசையில் முதல் 20 இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆய்வை மேற்கொண்டு, அதன் மூலம் BC, MBC கோட்டா மூலம் பயன் பெறும் மாணவர்களின் பொருளாதார பின்புலத்தை துல்லியமாக கணக்கெடுக்கலாம். இப்படி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், பிறகு கிரிமி லேயர்கள் பற்றிய எனது வாதம் நிருபனமாகிவிடும். இவர்களில் 90 சதவீதத்தினர் கிரீமி லேயர் பிரிவினர் என்று உறுதியாக நம்புகிறேன்.

தமிழகத்தில் BC, MBC, SC, ST பிரிவுகளைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழில்முறை பிரிவுகளில் உள்ள 69% இட ஒதுக்கீட்டில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் மிக, மிக குறைந்த அளவில் இட ஒதுக்கீடு பெறுகின்றனர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அரசு இந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறையே கூடாது என்று தீவிரமாக வாதிடுபவர்கள் இந்த உள் ஒதுக்கீட்டு முறை பற்றி பேசுவதில்லை. இதுவும் ஒரு வகையான கிரீமி லேயர் முறை தான். இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும், பொருளாதார அளவுகோல்களை இதில் சேர்க்கக் கூடாது என்பவர்கள் இதை ஏன் அங்கீகரிக்கின்றனர்? இலவச கல்வி கிடைக்கும் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாண்வர்கள் ஆனாலும் சரி, அதீத கட்டணங்களை கோரும் உயர் ரக தனியார் பள்ளி மாணவர்கள் ஆனாலும் சரி, அனைவருக்கும் சாதி அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தானே இவர்கள் வாதாட வேண்டும் ? பள்ளிகளின் அடிப்படையில் இப்படி உள் ஒதுக்கீடு வழங்குவது கிரீமி லேயர் முறையின் ஒரு அம்சம் தானே ? இதை ஏற்பவர்கள், குடும்ப வருமான அளவு அடிப்படையிலான கிரீமி லேயர் முறையை ஏற்பதில் என்ன தடை? தரக்க ரீதியாக இரண்டும் ஒன்று தானே? ஆனால் இந்த கேள்விக்கு, கிரீமி லேயர் முறை எதிர்ப்பாளர்கள் பதில் சொல்லாமல், கள்ள மெளனம் காக்கின்றனர்.

தமிழகத்தில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதத்தினர் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ள்களில் பயில்கின்றனர். ஆனால் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் இவர்களின் விகிதம் மிக மிக குறைவாக, 10 சதவீதத்திற்கும் குறைவாக பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதை சரி செய்யவே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இது போதாது. இதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். அல்லது கிரீமி லேயர் முறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அது தான் உண்மையான சமூக நீதி.     

கிரீமி லேயர் முறை முழுமையாக அமல்படுத்தப்பட்டால், பிறகு சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை குறைக்க நேரிடும். தற்போது முற்பட்ட பிரிவினருக்கும், பிற்பட்ட பிரிவினருக்கும் கட் ஆப் மதிப்பெண்கள் ஏறக்குறைய ஒரே அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, நடப்பாண்டில், சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் கிண்டி பெறியியல் கல்லூரியில், கட் ஆஃப் மதிப்பெண்கள் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கிசேனஸ் (ECE) பாடப்பிரிவில், OC பிரிவினருக்கு 198ஆகவும், BC பிரிவினருக்கு 196.75ஆகவும், MBC பிரிவினருக்கு 195ஆகவும் உள்ளன. BC, MBC பிரிவின் கிரீமி லேயர் மாணவர்கள் தாம் இதில் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதற்கு இது ஒரு ஆதாரம். OC எனப்படும் திறந்த கோட்டாவிலும் (இட ஒதுக்கீடு அல்லாத பொது பிரிவு) BC, MBC பிரிவு கிரீமி லேயர் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பிடிக்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது சமூக அநீதியாகும்.

கிரீமி லேயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் தான், மீதம் உள்ள பெரும்பான்மையினரான, அரசு பள்ளிகளில் பயிலும், ஏழை மற்றும் கீழ் நடுத்தர பிரிவுகளைச் சேர்ந்த BC, MBC பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் சென்று சேரும். இதை செயல்படுத்த முதல் கட்டமாக தமிழக அரசு, மேலே நான் விவரித்துள்ள ஆய்வை (பொறியியல், மருத்துவ கல்லூரி மாணவர்களிடம்) மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகளை பொது வெளியில் வைத்து, அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கோரி, இது பற்றி ஒரு பொது விவாதம் நடத்தப்பட வேண்டும்.

 (2026 செப்டம்பர் மாத காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை)