இடதுசாரிகளும், வலதுசாரிகளும்

இடதுசாரிகளும், வலதுசாரிகளும்

இடதுசாரிகள், வலதுசாரிகள் என்ற சொற்கள் ஒரு பொது பிம்பத்தை
கட்டமைக்கும் அளவிற்க்கு மிகவும் பரவலாக உபயோகிக்கபடுகின்றன.
இடதுசாரி என்றால் அவர் ஒரு ஏழை பங்காளன், ஏற்ற தாழ்வுகளை
அகற்றப் பாடுபடுபவர், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர், மதவாதத்தை 
எதிர்ப்பவர்  ;   வலதுசாரி என்றால் அவர் பணக்கார்களின் ஆதாரவாளர்,
ஏழைகளின் எதிரி, தொழிலாளர்களை "சுரண்டுபவர்", ஏகாதிபத்திய
ஆதரவாளர், ஃபாசிசவாதி, மதவாதி, கொடூர நெஞ்சம் படைத்தவர்,
இப்படி சில முன்முடிவுகளை இந்த "லேபில்கள்" மூலம், ஒருவரை
பற்றி முத்திரை குத்த பயன்படுத்தப்படுகிறது.
 
இவை எல்லாம் வெறும் முத்திரைகள். அர்த்தமற்றவை. ஆழமற்ற
லேபில்கள். வாதங்களை எளிமைபடுத்த உபயோகப்படும் சொல்லாடல்கள்.
அவ்வளவுதான்.
 
வலதுசாரி என்றால் அவன் ஒரு ஃபாசிஸ்ட் அல்ல. இடதுசாரி என்றால்
அவன் ஒரு ஃபாசிச எதிர்ப்பளரும் அல்ல. ஃபாசிசத்தை முன் மொழிந்த
சர்வாதிகாரியான முசோலனியும் வலதுசாரிதான். லிபரல் ஜனனாயகத்தை,
மக்களாட்சியை முன்மொழிந்த எர்கார்ட் (ஜெர்மன் அதிபர்) போன்றவர்களும்
அதே வலதுசாரி என்ற லேபில் / முத்திரையின் கீழ் சேர்க்கப்படுகிறார்கள்.
 
சே குவாராவும் இடதுசாரிதான், நேருவும் இடதுசாரிதான். முன்னவர்
பாரளுமன்ற ஜனனாயகத்தில் நம்பிக்கை இல்லாத போராளி, பின்னவர்
ஜனனாயகவாதி. எனவே, இந்த வலது / இடது லேபில்கள், முன்முடிவுகளை
அளித்து, ஒருவரை பற்றிய சரியான எடைபோடுதலை செய்யவிடாமல்
குழப்பும்.
 
வலதுசாரிகள் என்றால் அவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்ல. எந்த
வகை அடிப்படைவாதமும் ஃபாசிமே ஆகும். எனவே சரியான
சொல்லாடல்கள் :  ஃபாசிசவாதி / ஜனனாயகவாதி. அடிப்படை மனித
உரிமைகளை மதிப்பவர் ஜனனாயகவாதி. மறுப்பவர் ஃபாசிசவாதி.
 
அடிப்படை ஜனனாயக உரிமைகளில்  சொத்துரிமையும் அடக்கம். அதை
ஜனனாயக வழியில் முன்மொழிதலே வலதுசாரி சிந்தனைகள் எனலாம்.
(அப்படித்தான் எம்மை கருதுகிறேன்). ஆனால் ஃபாசிச முறையில் எதை
முன்மொழிந்தாலும் அது ஏற்க்கமுடியாது. ஃபாசிஸ்டுகள் இடது / வலது
இரு தளங்களிலும் உள்ளனர். எனவே மேலும் குழப்பம்.
 
உதாரணமாக இடி அமின், சதாம் ஹுசைன் போன்றவர்கள் ஃபாசிஸ்டுகள்
என்பதை சுலபமாக உணரலாம். ஆனால் மாவோ, ஜோஸஃப் ஸ்டாலின்
போன்றவர்களை ஒரு ஃபாஸிஸ்ட் என்று உணர்வது கடினம். அவர்கள்
சித்தாந்தரீதியாக "இடதுசாரிகள்" ; பொது உடைமைவாதிகள், பாட்டாளி
வர்கத்தின் ரட்சகர்கள் என்று இன்றும் சில தீவிர மார்க்சியவாதிகளால்
கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் செய்த
செயல்கள் பற்றிய முழுவிபரமும் தெரியாமல், அல்லது தெரிந்தும்,
அதை "வரலாற்று கட்டாயங்கள்" என்று நியாயபடுத்திக்கொண்டு
கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள்.
 
வலதுசாரிகள் என்றால் ஏழைகளின் எதிரிகள் என்று ஒரு பிம்பம்.
ஆனால் அது முற்றிலும் தவறான கட்டமைப்பு. சுதந்திர சந்தை
பொருளாதார கொள்கைகள் மூலம், வளர்ந்த நாடுகள் அனைத்தும்
(முக்கியமாக இரண்டாம் உலகபோரில் அழிந்த ஜெர்மனி, ஜப்பான்,
தென் கொரியா, மலேயா போன்ற நாடுகள்) ஏழ்மையை பெருவாரியாக
குறைத்த வரலாறு பெரிதாக அறியப்படவில்லை. ஆனால் அந்நாடுகள்
பின்பற்றும் கொள்கைகள் "வலதுசாரி" கொள்கைகள். நேர் எதிராக
"இடதுசாரி" கொள்கைகளை (பல பாணிகளில்) பின் பற்றிய சுதந்திர
இந்தியா போன்ற நாடுகளும், சோவியத் ரஸ்ஸிய, வட கொரியா
போன்றவை வறுமையை பரவலாக்கி, ஊழல் மிகுந்து, ஏறக்குறைய
ஃபாசித்தை உருவாக்கி சீரழந்தன. இதிலிருந்தே வலதுசாரிகள் என்றால்
ஏழைகளின் எதிர்கள், ஏழைகளை ஏழைகளாகவே இருக்க செய்யும்
பிற்போக்காளர்கள் என்ற பிம்பம் உடைகிறது.
 
30 வருடங்களுக்கு முன்பு வரை இந்திய அரசியலில் சரளமாக
சில‌ சொற்கள் பிரயோகிக்கப்பட்டன : 'சோசியலிஸ்டுகள், ஏழை
பங்காளர்கள், முற்போக்காளர் / பிற்போக்காளர்', இன்னபிற. முக்கியமாக
இந்த முற்போக்காளர் / பிற்போக்காளர் என்ற முத்திரைகள் விளைவித்த
நாசம் மிக அதிகம். வலதுசாரிகள் எல்லாம் பிற்போக்காளர்கள்,
இடதுசாரிகள் எல்லாம் முற்போக்காளர்களாம். அதனால வலதுசாரி
என்று முத்திரை குத்தப்பட்ட அனைவரும் ஓரங்கட்டப்பட்டனர்.
அம்முத்திரையை கண்டு அனைவரும் பயந்தனர். முற்போக்காளர்
என்ற முத்திரையை விரும்பினர். இது அறிவுஜீவிகள் மத்தியில்
மட்டுமல்ல, பல அரசியல் கட்சிகள் வட்டத்திலும் நிலவியது.
முக்கியமாக அன்றைய ஆளும் கட்சியாக, பலமாக, பல காலம்
ஆண்ட காங்கிரஸ் தலைவர்களிடம் மிகுதியாக இருந்தது. இந்திரா
காந்தியின் சர்வாதிகார போக்கை எதிர்க்க துணிந்தவர்களுக்கு
இந்த வலதுசாரி பட்டம் கிடைக்கும் என்பதாலேயே பலரும்
"இடதுசாரி முற்போக்குவாதி" என்ற முத்திரை பெற துடித்து,
இந்திரா காந்தியின் ஃபாசிதற்க்கு துணை போயினர்.   
நல்லவேளையாக இது போன்ற லேபில்கள் இன்று அரசியல்
சூழலில் இல்லாமல் ஆனாது. ஊழல் மட்டும்தான் இன்று
பரவலாக உள்ளது. 

 

11 comments:

K.R.அதியமான் said...

இந்த பதிவுடன் மிக நெருக்கமான் தொடர்புடைய எமது ஆங்கில பதிவு இது :

http://athiyaman.blogspot.com/2008/10/holiest-of-all-holies.html

மு. மயூரன் said...

இடதுசாரி அரசியல், வலதுசாரி அரசியல் என்கிற பருமட்டான பிரிவு ஒன்று நல்லது இன்னொன்று கூடாது என்ற அடிப்படையிலானதல்ல.

எது சிறந்தது என்ற கேள்விக்கு இருசாரர்களும் தமதே சிறந்தது என்று பதிலளிக்கலாம்.

வலது சாரி அரசியல் என்பது பருமட்டாக இவ்வாறு வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே உள்ள சமூக, பண்பாட்டு பெறுமதிகளை அப்படியே காக்க வெளிக்கிடுகிற அரசியல், தனிச்சொத்துடைமையை, முதலாளிய, நிலவுடைமைக் கட்டமைப்பை பேண நினைப்பவர்கள், சமூகத்திலுள்ள ஏற்றதழ்வுகள் மதம், ஆணதிகாரம் உட்பட பல கட்டமைப்புக்க்ளை நியாயப்படுத்தவும் பேணிக்கக்கவும் விரும்புபவர்கள் வலதுசாரிகள் எனப்படுவார்கள்.


இதற்கெதிராக தனிச்சொத்துடைமையை எதிர்ப்பவர்கள், சமூக மாற்றத்தினை, கலாசாரப்புரட்சியினை ஆதரிப்பவர்கள், இப்போதுள்ள சமூக, பொருளாதார அமைப்பின் கீழான கண்டனங்களுடன் அதனை மாற்றியமைக்க நினைக்கும் அரசியலுக்குச் சார்பானவர்கள், மதம், ஆணதிகாரம், சமூக ஏற்றதாழ்வுகளை முற்றாக ஒழித்து எதிர்க்க நினைப்பவர்கள் இடதுசாரிகள் எனப்படுகின்றனர்.

இதில் நீங்கள் எவ்வகைக்கொள்கைகளை கொண்டிருக்கிறீர்களோ அந்த சாரராகிறீர்கள்.

இது ஒரு பருமட்டான பிரிப்பே. இலகுவாக வகைப்படுத்த என வந்தது.கருப்பு, வெள்ளை எனும் இலகுவான வகைப்படுத்தல்கள் தம்மிடையே சாம்பல் பகுதிகளைக்கொண்டிருக்கும்

அதைப்போலவே சாதியமைப்பை முற்றாக எதிர்க்கும் வலதுசாரியும், கருத்துமுதல்வாதக்கூறுகளை சிறிது உள்வாங்கிய இடதுசாரிகளும் இருக்கமுடியும்.

பிரிப்பும் பரும்படியானது என்பதால், பெரும்பாலும் நீங்கள் எந்தப்பிரிப்புக்குரிய சார்பு நிலைகளைக் கொண்டிருக்கிறீர்களோ அந்தப்பிரிவினுள் வந்துவிடுகிறீர்கள்.

முற்போக்கு (progressive) என்ற சொல் இரு தரப்பாலும் பயன்படுத்தப்படுவதுதான்.

இந்தப்பதிவைப்பார்க்கும் போது நீங்கள் இடதுசாரிகளின் கணோட்டத்தோடு உடன்பட்டு வலதுசாரிகளைக் கீழிறக்குவது போல் இருக்கிறது.

ஏனென்றால் வலதுசாரிகளின் கண்ணோட்டத்தில் உலகமயமாக்கமும், நவ தாராளமயமாக்கமும் "முற்போக்கான" எண்ணக்கருக்கள்.

மு. மயூரன் said...

உண்மையில் தனிமனிதர்கள் என்ற அடிப்படியிலல்ல, மாறாக அமைப்பு, கட்சி என்ற அடிப்படையிலேயே இடதுசாரி-வலதுசாரிப் பிரிப்பு மிகத்தெளிவாக அமைகிறது.

குறித்த அமைப்பு, கட்சி, தனது வேலைகளை எதனடிப்படையில் செய்கிறது. எதற்குச்சாதகமான திசையில் செல்கிறது, அந்த அமைப்பின்/கட்சியின் கோஷங்களும், நடைமுறையும் இந்தச் சார்பு நிலையின் வளர்ச்சிக்கும் பயன்பாட்டுக்கும் துணை போகிறது என்பதன் அடிப்படையில் மிகத்தெளிவாக அது இரண்டில் ஒரு வகைக்குள் வந்து விழுகிறது.

இந்த அடிப்படையில் இப்பிரிப்பு தெளிவாக இருக்க காரணம் இயற்கையானது.

இந்தப்பிரிப்பே கட்சிகளை, அரசியல் அங்கத்துவர்களைக் குறிக்க என்று வந்ததுதான்.

K.R.அதியமான் said...

வாங்க மயூரன்,

நான் எழுதியபடியே சில முன்முடிவுகளோடு எழுதுறீங்க !!

///சமூகத்திலுள்ள ஏற்றதழ்வுகள் மதம், ஆணதிகாரம் உட்பட பல கட்டமைப்புக்க்ளை நியாயப்படுத்தவும் பேணிக்கக்கவும் விரும்புபவர்கள் வலதுசாரிகள் எனப்படுவார்கள்.////

இல்லை. மிக தவறான அனுமானம். ஃபாசிசம் என்பது வலதுசாரியாகாது என்பதைதான் சொல்லியிருக்கிறேன். அதே போல ஏற்றதாழ்வுகளை பேண யாரும் நினைப்பதில்லை. ஏழைகளை மேம்பட செய்யவே விழைகிறார்கள். உங்க வாதாம் மிக மிக தவறான‌
முன்முடிவுகளுடன் உள்ளது.

அமெரிக்காவில் மூன்றாவதாக ஒரு அரசியல் கட்சி உள்ளது. லிபர்டேரியன் கட்சி (யான்
அதன் அனுதாபி அல்லது ஆதரவாளர்). அதை பற்றிய எமது பழைய பதிவு :

http://nellikkani.blogspot.com/2009/03/libertarian.html

இக்க‌ட்சியும் 'வ‌ல‌துசாரி' என்றே வ‌கைப் ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து. ஆனால் உங்க‌ அனுமான‌ங்க‌ளில் இவ‌ர்க‌ளை சேர்க்க‌ முடியாது. ஆணாதிக்க‌ம், ம‌த‌வாத‌ம் போன்ற‌வ‌ற்றை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள்.

ம‌த‌வெறி வேறு, ம‌த‌ உரிமை வேறு. குழ‌ப்பிக்கொள்ள‌ வேண்டாம். த‌னி ம‌னித‌ ம‌த‌, க‌ட‌வுள் ந‌ம்பிக்கைக‌ள், கூட்டு வ‌ழிபாடுக‌ள் ம‌ற்றும் ம‌த‌ ச‌ட‌ங்குக‌ளை பின்ப‌ற்ற‌ எல்லோருக்கும்
அடிப்ப‌டை உரிமை இருக்கிற‌து. ஆனால் ம‌த‌ம் அர‌சிய‌லில் க‌ல‌க்க‌வோ, அல்ல‌து ம‌த‌த்திம்
பெய‌ரால் அடிப்ப‌டைவாத‌ம், அட‌க்குமுறை, ஃபாசிச‌ம் உருவாவ‌த‌ற்க்கு வ‌ழி செய்வ‌தே
ம‌த‌வாத‌ம். அது வ‌ல‌துசாரி சிந்த‌னை ஆகாது. ஃபாசிச‌ம் என்று சொல்ல‌ வேண்டும்.

இந்தியாவில் 1950இல் ராஜாஜி தலைமையில் உருவான சுதந்திரா கட்சிதான் வலதுசாரி கட்சிக்கு நல்ல உதாரணம். பி.ஜெ.பி, ஜனசங்கம், முஸ்லிம் லீக் போன்றவை அல்ல.
அவை மதவாத கட்சிகள்.

ஃபாசிசவாதியா அல்லது ஜனனாயகவாதியா என்றுதான் பகுக்க வேண்டும். அதுதான் சரியான முறை. அடிப்படை மனித உரிமைகளை மதிப்பவரே ஜனனாயகவாதி. சித்தாந்ததை நிலை நிறுத்த (ஏற்ற தாழ்வுகளை அகற்றும் நோக்கம் என்று நம்பிக்கொண்டு)
அடிப்படை உரிமைகளை நசுக்க தயங்காதவர் ஃபாசிசவாதிதான். நோக்கங்களை விட‌ வ‌ழிமுறைக‌ளே முக்கிய‌ம். வ‌ழிமுறைக‌ள் ஜ‌ன‌னாய‌க‌ பாதையில், ம‌னித‌ உரிமைக‌ளை
சிறிதும் மீறாம‌ல் இருப்ப‌தே அற‌ம். ம‌ற்ற வ‌ழிமுறைக‌ள் எல்லாம் ஏதோ ஒரு வ‌கை ஃபாசிச‌மே.

K.R.அதியமான் said...

///இந்தப்பதிவைப்பார்க்கும் போது நீங்கள் இடதுசாரிகளின் கணோட்டத்தோடு உடன்பட்டு வலதுசாரிகளைக் கீழிறக்குவது போல் இருக்கிறது.

////

அடக் கொடுமையே ! அப்படி தோன்றுகிறதா உங்களுக்கு.
நான் ஒரு வலதுசாரி என்று எனது ப்ரோஃபைலில் தெளிவாக‌
அறிவித்துள்ளேன். வலதுசாரிகள் யார் என்று தெளிவுபடுத்தவே இந்த பதிவை எழுதினேன்.

இடதுசாரிகள் என்றால் அரசாங்கள் மிக பலமாக இருக்க வேண்டும்.
பல துறைகளையும் கட்டுபடுத்தும் அதிகாரம் கொண்டதாக‌ இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள். வலதுசாரிகள் அதற்க்கு நேர் எதிர். சிறிய அரசு. இதுதான் முக்கிய‌
வேறுபாடு. அதிகாரம் ஒரு முனையில் குவிய‌ (பல சமயங்களில் அது ஃபாசிச அதிகார மையமாக‌
உருவெடுக்க வழி செய்கிறது) இடதுசாரிகள் வ‌ழிவ‌கை செய்கிறார்க‌ள். அத‌ற்க்கு என்ன‌
கார‌ண‌ம் அல்ல‌து நோக்க‌ம் க‌ற்பித்தாலும் ச‌ரி. அதுதான் வ‌ர‌லாறு த‌ரும் தெளிவு.

இது ஒரு முக்கிய‌ நூல். நோப‌ல் ப‌ரிசு பெற்ற‌ அறிஞ‌ர் 1944இல் எழுதிய‌து. பார்க்க‌வும் :

"The Road to Serfdom"
by Friedrich von Hayek

http://en.wikipedia.org/wiki/The_Road_to_Serfdom

Jawahar said...

நான் இதிலே கொஞ்சம் வீக். நைலான் சாரி, காட்டன் சாரி பத்தி எழுதும் போது சொல்லுங்க வர்றேன்.

http://kgjawarlal.wordpress.com

மு. மயூரன் said...

வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்குமான அடிப்படையான வேறுபாடு தனிச்சொத்துடைமை குறித்த அவர்களது அரசியற் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

மேல்மட்டத்தில் உள்ள சிக்கல்களான சாதி, பால்நிலை அசமத்துவம், சூழலியல் போன்ற விஷயங்களில் பலரும் பல நிலைப்பாடுகளையும் எடுக்கக்கூடியதாயிருக்கிறது. இந்த அடிப்படையை வத்தி வலது சாரி இடது சாரி பிரிப்பினை செய்ய வெளிக்கிடும்போது குழப்பம் ஏற்படுகிறது.

அடிப்படையாயமைவது என்னவென்றால், தனிச்சொத்துடைமைக்கும், தனிச்சொத்துடைமாய் உருவாக்கப்பட்ட, அதனைப்பாதுகாக்கும் மேல்மட்ட கட்டமைப்புக்களுக்கும் சார்பாய் இருக்ககூடிய நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் கொண்டவர்கள் வலதுசாரிகள்.

தனிச்சொத்துடைமைக்கும், அதனால் உண்டான, அதனைக்காக்கும் அத்தனைக்கட்டமைப்புக்களுக்கும் எதிராய், அவற்றை ஒழிக்க முயலும் அரசியல் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் கொண்டவர்கள் இடதுசாரிகள்.

உண்மையில் தனிச்சொத்துடைமையில் தான் எல்லாம் மையம் கொள்கிறது.

அரசு எப்படி அமைய வேண்டும் என்பது தொடக்கம் மற்றெல்லாம் இந்த அடிப்படையில் வருவதுதான். மற்றபடி சோற்றைப் பிசைந்து சாப்பிடுவதா, கரண்டியால் சாப்பிடுவதா என்பதிலெல்லாம் தெளிவான இடது-வலது சாரி வேறுபாட்டைத் தேட முடியாது.

K.R.அதியமான் said...

மயூரன்,

அப்படியும் சொல்ல முடியாது !!!

தனியுடைமையை அறவே எதிர்பவர்களை கம்யூனிஸ்டுகள் என்றும்,
ஏற்பவர்களை முதலாளித்துவவாதிகள் என்றும் பிரிக்கலாம்.
ஆனால் இந்த இரு சாரர்களுக்களிலும் இடது / வலதுசாரிகள்
உள்ளனர்.

முதலாளித்துவ பொருளாதார நிபுணர் கீயின்ஸ் மற்றும் இன்று
பிரபலமாக உள்ள பால் க்ருக்மேன் போன்றவர்கள் இடதுசாரிகள்
என்றும், ஆஸ்ட்ரியன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அய் சேர்ந்த‌
வான் மிஸஸ், ஹெயாக், மில்டன் ஃபிரீட்மேன் போன்றவர்கள்
வலதுசாரிகள். ஆனால் இரு சாரரரும் கம்யூனிஸத்தை கடுமையாக‌
எதிர்ப்பவர்கள்.

இந்தியாவில் இடது / வலது கம்யூனிச கட்சிகள் உள்ளன !!
ஸ்டாலின் காலத்தில் வலதுசாரி கம்யூனிஸ்டுகள் ரஸ்ஸியாவில்
நசுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தனியுடைமையை
எதிர்பவர்களே !!

இடது / வலதிற்க்கு, இன்றைய டெஃபனிஸன் எளிமையானது :
அரசின் அதிகாரங்கள் மற்றும் அளவு பற்றியது. சிறிய, எளிமையான,
மிக குறைந்த அளவு அதிகாரமுள்ள அரசை முன்மொழிபவர்கள்
இடதுசாரிகள். பெரிய அரசை, பலமான பல அதிகாரங்களை
கொண்ட அரசை முன்மொழிபவர்கள் வலதுசாரிகள்..

ஒவ்வொறு க‌ட்ட‌த்திலும் சொற்க‌ளுக்கான‌ அர்த்த‌ங்க‌ள் ம‌ற்றும்
பிரோய‌க‌ங்க‌ள் மாறுகின்ற‌ன‌. லிப‌ர‌லிஸ‌ம் என்ற‌ சொல்லில்
அர்த்த‌ம் வெகுவாக‌ ம‌றிவிட்ட‌து போல‌..

மு. மயூரன் said...

தொடர்ந்து உரையாடுவதற்கு நன்றி அதியமான்.

இடதுசாரி, வலதுசாரி என்பதற்கான சரியான வரைவிலக்கணம் ஒன்றை நோக்கி இந்த உரையாடல் போகிறது.

வரைவிலக்கணத்தின் தற்காலத்தன்மை முக்கியம் என்பதை நீங்கள் எடுத்துக்காட்டியிருப்பது பயனுள்ளது.

கீழ்வரும் விக்கிபீடியா கட்டுரைகளைப் பார்க்க:

http://en.wikipedia.org/wiki/Left-wing_politics

http://en.wikipedia.org/wiki/Right-wing_politics

நாம் முன்னரே உரையாடிய படியான, இருக்கும் கட்டமைப்பில் தீர்க்கமான மாற்றங்களை உருவாக்க விரும்புபவர்கள் இடதுசாரிகள் என்றும், இருக்கு கட்டமைப்புக்களை காக்க முயல்பவர்கள் , பழைமை பேணுபவர்கள் (conservatives) வலதுசாரிகள் என்றும் தான் அடிப்படையில் சொல்லப்படுகிறது.

இந்தச்சொல் பிரேஞ்சுப் பாராளுமன்றத்தில் வலப்பக்கம் இருந்தவர்கள், இடப்பக்கம் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் உருவாகி இருக்கிறது.

K.R.அதியமான் said...

சுட்டிகளுக்கு நன்றி மயூரன். இரண்டு நாட்களுக்கு முன்பே இவற்றை தேடிப்படித்தேன் !!

S.Rengasamy said...

த்விட்டேர் மூலமாக உங்கள் வலை பதிவிற்கு வந்தேன். வலதாகவும் இடதாகவும் இல்லாமல் மைய மார்க்கத்தை தேர்ந்தெடுத்து செயல் படுகிறவர்கள் பங்களிப்பு மற்ற இருவரையும் விட அதிகம் என்பது என் தாழ்மையான கருத்து.